கல்லணை கால்வாயில் 2,017 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது கரைகளை கவனமுடன் கண்காணிக்க விவசாயிகள் கோரிக்கை
கல்லணை கால்வாயில் 2,017 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் கரைகளை கவனமுடன் கண்காணிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி,
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது. கல்லணையிலிருந்து கடந்த மாதம் 16-ந் தேதி காவிரி வெண்ணாறு, கல்லணை கால்வாய், மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டபோது அணையின் நீர் இருப்பு 97 அடியாக இருந்தது. நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 82.09 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து 836 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து காவிரி பாசனப் பகுதிகளுக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையிலிருந்து காவிரியில் 3,305 கன அடியும், வெண்ணாற்றில் 7,505 கன அடியும், கொள்ளிடத்தில் 1,213 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கல்லணை கால்வாயில் கடந்த ஜூன் 16-ந் தேதி 500 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர், கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 2017 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. கல்லணை கால்வாய் தண்ணீரைக் கொண்டு 88 ஆயிரம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி நடைபெறும் என்று கூறப்பட்ட போதும் , இந்த ஆண்டு அந்த அளவுக்கு குறுவை சாகுபடி நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. தண்ணீர் திறக்கப்பட்டு 15 நாட்கள் வரை மிகக் குறைவான அளவிலேயே கல்லணை கால்வாயில் தண்ணீர் வெளியிடப்பட்டது.
இதனால் கல்லணை கால்வாயின் கிளைவாய்க்கால்களில் தண்ணீர் முழு அளவில் செல்லாமல் விவசாயிகள் நாற்றங்கால் தயார் செய்வதில் தாமதம் ஆனது. தற்போது 2017 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் கல்லணை கால்வாயில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு ஓடுகிறது. கால்வாய் கரையில் போடப்பட்டிருந்த கான்கிரீட் பலகைகள் அகற்றப்பட்ட நிலையில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கவனமுடன் கரைகளை கண்காணிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story