குடிபோதையில் தகராறு: தொழிலாளி வெட்டிக்கொலை தந்தை கைது


குடிபோதையில் தகராறு: தொழிலாளி வெட்டிக்கொலை தந்தை கைது
x
தினத்தந்தி 4 July 2021 10:59 PM IST (Updated: 4 July 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை வெட்டிக்கொன்ற அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பெரும்பாவூர்,

எர்ணாகுளம் மாவட்டம் உதயம்பேரூர் அருகே உள்ளாடன்வெளி பகுதியை சேர்ந்தவர் மணி(வயது 75). இவரது மகன் சந்தோஷ்(45). இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் தந்தை, மகன் ஆகியோர் கூலி தெழிலாளர்கள் ஆவர். ஆனால் குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவர்கள் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு குடிபோதையில் வீட்டுக்கு வருவது வழக்கம் என்று கூறப்பகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்ததும் தந்தை, மகன் ஆகியோர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மணி அரிவாளால் சந்தோஷை சரமாரியாக வெட்டினார். அதன்பிறகு அவர் தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையில் அரிவாள் வெட்டு விழுந்ததில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உதயம்பேரூர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்த சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மணியை தேடி வந்தனர்.

பின்னர் எர்ணாகுளம் நகரில் சுற்றித்திரிந்த அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் எர்ணாகுளம் முதல் வகுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story