கூடலூரில் அரசு பஸ்களை இயக்கி சோதனை ஓட்டம்


கூடலூரில் அரசு பஸ்களை இயக்கி சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 4 July 2021 11:05 PM IST (Updated: 4 July 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பஸ்களை இயக்குவதற்கான சோதனை ஓட்டத்தை டிரைவர்கள் மேற்கொண்டனர்.

கூடலூர்

2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பஸ்களை இயக்குவதற்கான சோதனை ஓட்டத்தை டிரைவர்கள் மேற்கொண்டனர்.

2 மாதங்களாக நிறுத்தி வைப்பு

தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொதுபோக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக அரசு பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. நீலகிரி, கோவை உள்பட 11 மாவட்டங்களில் கொரோனா பொதுபோக்குவரத்துக்கு அனுமதி வழங்கவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் இன்று (திங்கட்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், கோத்தகிரி பணிமனைகளில் கடந்த சில தினங்களாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மற்றும் அரசு பஸ்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மேலும் பஸ்களில் பழுதுநீக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.
 
அரசு பஸ்களை இயக்கி சோதனை ஓட்டம்

கூடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 48 பஸ்கள் உள்ளது. இந்த பஸ்களை கடந்த 2 தினங்களாக சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. நேற்று பஸ்களை அதன் டிரைவர்கள் கூடலூர் நகர சாலைகளில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தினர். 

2 மாதங்களாக ஒரே இடத்தில் அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் சில பஸ்கள் பழுதடைந்து இருந்தது. அந்த பஸ்களை போக்குவரத்து பணிமனைகளில் உள்ள என்ஜினீயர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கூடலூர் போக்குவரத்து கழக மேலாளர் ராஜ்குமார் கூறியதாவது:-
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். கூடலூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு வழக்கம்போல் இயக்கப்படும். 

பஸ்களில் பயணம் செய்யும்போது பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும். இதை நடத்துனர் கண்காணித்து கொண்டிருப்பார். அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பயணிகள் கண்டிப்பாக பின்பற்றி போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story