பெங்களூருவில் காதல் மனைவியை கொன்ற வாலிபர் கைது
பெங்களூருவில் காதல் மனைவியை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். உடல்நலக்குறைவால் மனைவி இறந்ததாக நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு:
மர்ம சாவு
பெங்களூரு மைகோ லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பி.டி.எம். லே-அவுட்டில் வசித்தவர் அஜித் (வயது 32). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சானியா என்பவரை காதலித்து திருமணம் செய்து இருந்தார். அஜித்தும், அவரது மனைவி சானியாவும் மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 2 பேரும் தினமும் வீட்டில் வைத்தே மதுஅருந்தி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி சானியா வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அஜித் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சானியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த மைகோ லே-அவுட் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சானியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அஜித்திடமும் விசாரித்தனர். அப்போது உடல்நலக்குறைவால் சானியா வீட்டில் மயங்கி விழுந்தததாகவும், இதில் தலையில் காயம் ஏற்பட்டு சானியா இறந்து விட்டதாகவும் போலீசாரிடம் அஜித் கூறினார். இதனால் சானியா இறந்தது குறித்து போலீசார் மர்ம சாவு வழக்குப்பதிவு செய்தனர்.
அடித்து கொலை- கைது
இந்த நிலையில் சானியாவின் தாய் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்றும் மைகோ லே-அவுட் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் அஜித்தை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது சானியா வீட்டில் இருந்து அடிக்கடி வெளியே சென்று வந்ததாகவும், இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் சானியை தலையில் அடித்து கொலை செய்ததையும் அஜித் ஒப்புக்கொண்டார். மேலும் போலீசில் இருந்து தப்பிக்க உடல்நலக்குறைவால் சானியா இறந்ததாக நாடகமாடியதாகவும் அஜித் கூறி இருந்தார். இதனால் அஜித்தை போலீசார் கைது செய்தனர். கைதான அஜித் மீது மைகோ லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story