மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு சட்ட போராட்டம் நடத்தும் - மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்வதாகவும், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு சட்ட போராட்டம் நடத்தும் என்றும் போலீஸ் மற்றும் சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
புதிய தடுப்பணை
தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக வனப்பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே எரகோள் என்னும் இடத்தில் கர்நாடக அரசு தடுப்பணையை கட்டியுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் மற்றும் சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் செய்கிறது
தமிழக அரசு காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து தான் வருகிறது. அதுபோல் தான் தற்போது மார்கண்ேடய நதி விவகாரத்திலும் தமிழக அரசு கர்நாடகத்திற்கு எதிராக செயல்படுகிறது. கர்நாடக மாநில எல்லைக்குள் தான் மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேகதாதுவில் அணைகட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் எப்போதும் போல் கொடுக்கப்படும். மேகதாதுவில் அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்கிறது. தமிழகத்தில் தற்போது புதிய அரசு அமைந்துள்ளது. இதனால் சிறய பிரச்சினையையும் கூட பெரிது ஆக்குகின்றனர்.
சட்ட போராட்டம் நடத்தப்படும்
மேகதாதுவில் அணைகட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு சட்டப்படி நடந்து கொள்கிறது. மேகதாதுவில் அணைகட்டும் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குக்கு எதிராக கர்நாடக அரசு சட்ட போராட்டம் நடத்தும். மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் குறித்து தமிழக முதல்-அமைச்சருக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். இதற்கு தமிழக அரசு சரியான முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
மேகதாதுவில் அணைகட்டுவதால் 2 மாநிலத்திற்கும் பயன் உள்ளதாக இருக்கும். மழை குறைவாக பெய்தாலும், மேகதாதுவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது கே.ஆர்.எஸ். அணையில் மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடிகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் பெங்களூரு நகரின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். தமிழகத்திற்கும் அங்கிருந்து தண்ணீர் திறந்து விடமுடியும். இதுபற்றி தமிழக அரசு அறிந்திருந்தும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story