நிலத்தகராறில் விவசாயி வெட்டிக் கொலை
வீரவநல்லூரில் நிலத்தகராறில் விவசாயி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சேரன்மாதேவி:
வீரவநல்லூரில் நிலத்தகராறில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விவசாயி
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பந்தல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் காந்திநாதன். இவருடைய மகன் சரவணன் (வயது 32). அதே பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் அய்யப்பன் (33).
விவசாயிகளான இவர்களுக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று மாலையில் சரவணன் பந்தல்மேடு தாமிரபரணி ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அய்யப்பன் திடீரென்று அரிவாளால் சரவணனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சரவணன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து அய்யப்பன் தப்பி ஓடி விட்டார்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த கொலை சம்பவத்தைப் பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் வலைவீச்சு
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அய்யப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.
வீரவநல்லூரில் நிலத்தகராறில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story