654 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 97லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினர்


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 5 July 2021 1:28 AM IST (Updated: 5 July 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

654 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 97லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் 654 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவித் தொகையாக ரூ.3கோடியே 97 லட்சம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கி சிறப்புரையாற்றினர். மேலும் 25 மகளிருக்கு விலையில்லா தையல் எந்திரங்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 22 பேருக்கு அடையாள அட்டை மற்றும் கொரோனா 2-ம் கட்ட நிவாரணத்தொகை தலா ரூ.2 ஆயிரம் என ரூ.44 ஆயிரம் நிதியுதவித் தொகை வழங்கப்பட்டது.
 முன்னதாக ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்” துறையின் கீழ் வரப்பெற்ற கோரிக்கை மனுவின் மீது தீர்வு காணும் வகையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் சைக்கிள் நிறுத்தும் இடம் ஒட்டி நிரந்தரமாக ஆட்டோ நிறுத்தம் வைப்பதற்கான அனுமதியினை அமைச்சர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில்  எம்.எல்.ஏ.க்கள் முத்துராஜா, சின்னத்துரை, மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர் ரேணுகா, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை போஸ் நகரில் எரிவாயு தகனமேடையை நகராட்சி நிர்வாகம் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் எல்.பி.ஜி. தகன மேடையாக மாற்றி அமைத்துள்ளது. இதனை அமைச்சர்கள் பார்வையிட்டனர். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கிருஷ்ணவேணி, சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், திருவரங்குளம் அருகே உள்ள பொற்பனைக்கோட்டை கோட்டை கோவில் வாசலில் இருந்து புதுக்கோட்டை, திருக்கட்டளை, இம்னாம்பட்டி, பொற்பனைக்கோட்டை, வேப்பங்குடி, வம்பன் காலனி வழியாக ஆலங்குடி செல்லும் பஸ் போக்குவரத்தை அமைச்சர் மெய்யநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். திருமயம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் புதிய வழித்தடத்தில் அரசு பஸ் போக்குவரத்தை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலுக்கு வெளியூர் பக்தர்கள் வந்து செல்ல பஸ் போக்குவரத்து வசதியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

Next Story