திருச்சி விமான நிலையத்தில் ரூ.21½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.21½ லட்சம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்தில் ரூ.21½ லட்சம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கம் கடத்தல்
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து இயக்கப்பட்டு வரும் சிறப்பு மீட்பு விமானங்களில் தங்கம் கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது விழுப்புரத்தைச் சேர்ந்த சதீஷ்(வயது 24) என்ற பயணி தனது உடலில் மறைத்து 200 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.9.60 லட்சம் ஆகும்.
ரூ.21½ லட்சம் தங்கம் பறிமுதல்
இதேபோன்று துபாயில் இருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரது உடல் நிலை சீரான பின்பு அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அவர் தனது உடைமையில் பசை வடிவில் 250 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும். ஒரே நாளில் ரூ.21 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story