திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 70 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் சாமிதரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 70 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால் நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆனால், கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டதால் கடற்கரை வெறிச்ேசாடியது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 70 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால் நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆனால், கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டதால் கடற்கரை வெறிச்ேசாடியது.
ஊரடங்கில் தளர்வு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவியதை தொடர்ந்து வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் 26-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் கோவில் கடற்கரை, நாழிக்கிணறு போன்ற பகுதிகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தினமும் பூஜைகள் மட்டும் நடந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு நேற்று முதல் வழிபாட்டு தலங்களை திறக்கவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி அளித்து ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது.
அபிஷேகம்-தீபாராதனை
இதையடுத்து, 70 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது.
பின்னர் காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்ச தீபாராதனை, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தீபாராதனை, தொடர்ந்து ஏகாந்த தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் தரிசனம்
நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் அமர வைக்கப்பட்டனர்.
கோவிலுக்குள் சென்று குறிப்பிட்ட அளவு பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரவர, அங்கு அமர வைக்கப்பட்டிருந்த பக்தர்கள் கொஞ்சம் கொஞ்சம் பேராக உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்தனர்.
புனித நீராட தடை
மேலும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காது குத்தவோ, பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபடவோ அனுமதி வழங்கப்படவில்லை.
கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டது. இதனால் கடற்கரை மற்றும் நாழிக்கிணறு பகுதிகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
----------------
Related Tags :
Next Story