கோட்டூர் அருகே டிராக்டர் சக்கரம் உரசியதால் வாலிபரின் காது துண்டிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் விளைநிலத்தில் பரவி பயிர்கள் பாதிக்கப்பட்டது.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மேலபனையூர் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் விளைநிலத்தில் பரவி பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலத்தை ஓ.என்.ஜி.சி மூலம் சீரமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. ஆயில் கலந்த மண்ணை டிராக்டர்கள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு சாகுபடிக்கு தகுந்த வேறு மண்ணை கொட்டி சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் டிராக்டர் டிரைவர்கள் மதிய சாப்பாட்டுக்காக டிராக்டர்களை அங்கு நிறுத்தி விட்டு சென்றனர். அப்போது அந்த பகுதியில் இருந்த மேலப்பனையூர் தெற்கு தெருவை சேர்ந்த பிரவின்ராஜ் (வயது 22), கூத்தாநல்லூர் அருகே கிளியனூரை சேர்ந்த பாலகுரு (15) ஆகிய 2 பேர் ஒரு டிராக்டருக்கு அடியில் சென்று படுத்துள்ளனர். சாப்பிட்டு விட்டு வந்த டிரைவர் மதியழகன் (21) என்பவர் டிராக்டருக்கு அடியில் 2 பேர் படுத்திருப்பதை கவனிக்காமல் டிராக்டரை எடுத்துள்ளார். அப்போது டிராக்டர் உரசியதால் பிரவீன்ராஜின் வலது காது அறுந்து பாதி துண்டானது. பாலகுருவுக்கு உள் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஓ.என்.ஜி.சி. ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story