தூத்துக்குடியில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது


தூத்துக்குடியில்  கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி  போடும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 5 July 2021 8:26 PM IST (Updated: 5 July 2021 8:26 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ நேற்று தொடங்கி வைத்தார்.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. முதலில் ஒவ்வொரு பிரிவினராக முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால், கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 3-ந் தேதி தொடங்கப்பட்டது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு வருகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு...
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. 
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு டீன் நேரு தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரியில் உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல் நாளிலேயே கர்ப்பிணி பெண்கள் பலர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Next Story