நாகையில்,ஊரடங்கு தளர்வுகள் அமல்: வழிபாட்டு தலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க ஏற்பாடு 541 பஸ்கள் இயக்கம்


நாகையில்,ஊரடங்கு தளர்வுகள் அமல்: வழிபாட்டு தலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க ஏற்பாடு 541 பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 5 July 2021 9:33 PM IST (Updated: 5 July 2021 9:33 PM IST)
t-max-icont-min-icon

வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு, அங்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாகை மண்டலத்தில் 541 பஸ்கள் இயக்கப்படுகிறது.

நாகப்பட்டினம், 

நாகையில் ஊரடங்கு தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகின்றன. இதையொட்டி வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு, அங்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாகை மண்டலத்தில் 541 பஸ்கள் இயக்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டன. கோவில்களுக்குள் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழிபாட்டு தலங்களில் வழிபட அனுமதி இல்லாத காரணத்தால் மக்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்து வந்தனர். எப்போது வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பிலேயே மக்கள் இருந்து வந்தனர்.

தற்போது கொரோனா தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தி உள்ளது.

அதன்படி வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் அனைத்தும் இன்று திறக்கப்பட உள்ளது. நாகை மாவட்டத்தில் உலக பிரசித்திப்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, நாகை நெல்லுக்கடை மாரியம்மன்கோவில், நீலாயதாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளன.

இந்த வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்பட இருப்பதால், மக்கள் அதிக எண்ணிக்கையில் திரள வாய்ப்பு உள்ளது. எனவே வழிபாட்டு தலங்களில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன்படி வேளாங்கண்ணி பேராலயம் உள்பட பெரும்பாலான வழிபாட்டு தலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையிலும் இரும்பிலான தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

புகழ்பெற்ற நாகூர் தர்கா இன்று திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு நேற்று அங்கு தூய்மை பணிகள் நடந்தன. தொழுகை பந்தல் அமைக்கும் பணியும் நடந்தது. தர்காவின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள தூண்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அதேபோல வழிபாட்டு கூடம், ஆண்டவர் சமாதி செல்லும் வழி, பக்தர்கள் அமரும் இடங்கள் சுத்தம் செய்யப்பட்டன.

நாகை மாவட்ட வழிபாட்டு தலங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக வந்து வழிபாடு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்குள் செல்லும்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் 50 நாட்களுக்கு மேலாக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்று குறைந்த மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடங்கினாலும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக இருப்பதால் பொது போக்குவரத்துக்கான தடை நீடித்தது.

இந்த நிலையில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால், பொது போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கவும் அனுமதிக்கப்படுகிறது. தளர்வுகளின்படி நாகை போக்குவரத்து மண்டலத்தில் உள்ள நாகை, திருவாரூர், வேதாரண்யம், பொறையாறு, தரங்கம்பாடி, கொள்ளிடம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 பணிமனைகளில் இருந்து 541 அரசு பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன.

இதற்காக பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்கள் கிருமிநாசினி கொண்டு நேற்று சுத்தம் செய்யப்பட்டது. பஸ்களில் பயணிக்கும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பயணிகளுக்கு சானிடைசர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story