தஞ்சையில் இடியுடன் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
தஞ்சையில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், வெப்பசலனத்தினாலும் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்கிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் தஞ்சை மாநகரில் நேற்றுமாலை 6.30 மணி அளவில் காற்றுவேகமாக வீசியது. கருமேகங்கள் திரண்டு வந்தன. பின்னர் தூறலாக பெய்த மழை சிறிது நேரத்தில் பலத்த மழையாக பெய்தது. திடீர், திடீரென இடி இடித்ததுடன் பளிச், பளிச்சென மின்னலும் வெட்டியது. இந்த மழை 1½மணிநேரம் கொட்டித்தீர்த்தது.
மழையால் காந்திஜிசாலை, தெற்குவீதி, வடக்குவீதி, அண்ணாசாலை, ரெயிலடி, எம்.கே.மூப்பனார் சாலை உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அண்ணாசாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கியிருந்ததால் இருசக்கர வாகனங்கள், கார்களில் சென்றவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். அய்யங்கடைதெருவில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சென்றது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
தற்போது குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மழையும் பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையின் காரணமாக பூமி குளிர்ந்து இரவு நேரத்தில் குளிர்ந்த காற்றுவீசியது.
இதேபோல் நாஞ்சிக்கோட்டை பகுதிகளிலும், வல்லம் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் பகுதிகளில் பலத்தமழை பெய்தது. மேலும் கல்லணையில் 1 மணிநேரத்திற்கு மேலாக மழை பெய்தது.
Related Tags :
Next Story