குடும்பத்துடன் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


குடும்பத்துடன் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 July 2021 10:30 PM IST (Updated: 5 July 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

நாகை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிப்பாளையம்:
நாகை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் மாற்றுத்திறனாளி  தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
 தீக்குளிக்க முயற்சி
நாகை அருகே திருச்செங்கட்டாங்குடி பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது55). மற்றுத்திறனாளி. இவருடைய மனைவி சாந்தா (47), மகன் வெங்கடேசன் (26). மாற்றுத்திறனாளி. பக்கிரிசாமி தனது மனைவி, மகனுடன் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த பையில் இருந்து மண்எண்ணெய் கேனை எடுத்து அதை திறந்து திடீரென அவர் மீதும் மற்றும் மனைவி, மகன் மீதும் ஊற்ற முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனிப்பிரிவு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டென்னிசன் மற்றும் போலீசார், பக்கிரிசாமியிடம் இருந்து மண்எண்ணைய் கேனை பறித்தனர். 
இதைததொடர்ந்து பக்கிரிசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்  கூறியதாவது:-
மாற்றுத்திறனாளி
நானும், எனது மகனும் மாற்றுத்திறனாளிகள். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலுவலகத்தில் இருந்து கடந்த 2020-ம் ஆண்டு வீடு கட்ட உரிய உத்தரவினை பெற்றேன். 
இதையடுத்து எனது சொந்த செலவில் வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை வாங்கினேன். லிண்டல் மட்டம் வரை கட்டியுள்ளேன். பலமுறை கேட்டும் வீட்டிற்கு தேவையான கம்பி, சிமெண்ட் உள்ளிட்டவற்றை ஆணையர் அலுவலகத்தில் இருந்து தரவில்லை.இதனால் விரக்தியடைந்த குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தேன் என்றார்.
 பரபரப்பு
இதை தொடர்ந்து அவர்களை கலெக்டர் அலுவலகம் அழைத்து சென்றனர். அங்கு விசாரணை செய்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கொரோனா வைரஸ் தொற்றால் நீண்ட நாட்களுக்கு பிறகு குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story