கல்வராயன்மலை பகுதியில் கனமழை


கல்வராயன்மலை பகுதியில் கனமழை
x
தினத்தந்தி 5 July 2021 10:47 PM IST (Updated: 5 July 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் முசுகுந்தா ஆற்றில் தண்ணீர் வரத்து காணப்படுகிறது


மூங்கில்துறைப்பட்டு

கனமழை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.  கல்வராயன்மலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான மூலக்காடு, லக்கி நாயக்கன்பட்டி, புதுப்பட்டு, புதுப்பேட்டை, பவுஞ்சிபட்டு, புதூர், கடுவனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதியில் தேங்கி குளம்போல காட்சி அளித்தது.

தண்ணீர் வரத்து

மேலும் நீர் வரத்து வாய்க்கால்கள், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து காணப்படுகிறது. மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள முசுகுந்தா ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்க முடிகிறது. இதனால் கரையோரம் உள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தொடர்ந்து பெய்த மழையால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது சாகுபடி செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.

Next Story