பொள்ளாச்சியில் 50 சதவீத அரசு பஸ்கள் இயங்கின
ஊரடங்கில் கூடுதலாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பொள்ளாச்சியில் 50 சதவீத அரசு பஸ்கள் இயங்கின.
பொள்ளாச்சி
ஊரடங்கில் கூடுதலாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பொள்ளாச்சியில் 50 சதவீத அரசு பஸ்கள் இயங்கின.
உணவகங்களில் சாப்பிட அனுமதி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டது. மேலும் பொதுபோக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் கடந்த மாதம் முதல் பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கோவை மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டன.
தற்போது பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து கூடுதலாக தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி பொள்ளாச்சி பகுதிகளில் உணவகங்களில் நேற்று முதல் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டது.
சமூக இடைவெளி விட்டு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் உணவகங்களில் தெர்மல் ஸ்கேனர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இ-பதிவு தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.
பொது போக்குவரத்து
ஊரடங்கு தளர்வில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. பொள்ளாச்சியில் இருந்து கோவை, மதுரை, பழனி, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கும், சுற்று வட்டார கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன.
மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்துக்கு அனுமதி இல்லாததால், பொள்ளாச்சியில் இருந்து தமிழக-கேரள எல்லை வரை மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகளில் பயணிகள் அமர வைக்கப்பட்டனர்.
50 சதவீத அரசு பஸ்கள் மட்டும் இயங்கின. குறைவான அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் கிராமங்களுக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தனர். இதற்கிடையில் தனியார் பஸ்கள் நேற்று ஓடவில்லை.
110 அரசு பஸ்கள் இயக்கம்
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் 224 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 110 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன.
பஸ்சில் முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. பஸ்களில் குறைந்த அளவே பயணிகள் பயணம் செய்தனர். கிராமப்புறங்களுக்கு சென்ற பஸ்களில் மட்டும் ஒரளவுக்கு பயணிகள் பயணம் செய்தனர் என்றனர்.
தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், பொள்ளாச்சியில் இருந்து கோவை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு 87 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. 50 சதவீத பஸ்களை இயக்கினால் நஷ்டம் ஏற்படும். இதனால் தனியார் பஸ்கள் இயக்கவில்லை என்றனர்.
Related Tags :
Next Story