கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை வானமாதேவியில் 76 மில்லி மீட்டர் பதிவு
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக 76 மில்லி மீட்டர் மழை பதிவானது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலையில் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வெயில் அடித்தது.
இதற்கிடையில் வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு 12 மணி வரை பெய்தது. இருப்பினும் இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.
குறிப்பாக அண்ணா விளையாட்டு மைதானம், மஞ்சக்குப்பம் மைதானத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது.
பொதுமக்கள் அவதி
இதேபோல் தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. கடலூரில் பல இடங்களில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், மழைநீர் வடியாமல் சாலைகளில் தேங்கி நின்றதையும் பார்க்க முடிந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
பண்ருட்டி, விருத்தாசலம், வேப்பூர், லால்பேட்டை, அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 76 மில்லி மீட்டர் மழை பெய்தது. குறைந்த பட்சமாக அண்ணாமலைநகரில் 2.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 22.43 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
மழை அளவு
மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பண்ருட்டி-74.3, கடலூர் -73, கலெக்டர் அலுவலகம் -65.4, லக்கூர் -41, பெலாந்துறை, கீழசெருவாய் தலா 26, காட்டுமன்னார்கோவில்-25.3, குடிதாங்கி -25, விருத்தாசலம் -24, வேப்பூர்-23, காட்டுமயிலூர் -20, குப்பநத்தம், வடக்குத்து, மே.மாத்தூர் தலா 14, லால்பேட்டை-9, தொழுதூர் -8.
Related Tags :
Next Story