திருவண்ணாமலையில் கலெக்டரை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள்


திருவண்ணாமலையில் கலெக்டரை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 5 July 2021 11:18 PM IST (Updated: 5 July 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலெக்டரை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

மனு அளிக்க வந்தனர்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் திங்கட்கிழமைகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தருகின்றனர். 

பஸ் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்ட சமயத்தில் ஒரு சிலர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்கிருக்கும் மனு பெட்டியில் தங்கள் கோரிக்கை மனுக்களை செலுத்தி வந்தனர். தற்போது பஸ் போக்குவரத்து உள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திங்கட்கிழமையான நேற்று கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

 கலெக்டரை முற்றுகையிட்டு...

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களிடம் மனுக்களை பெட்டியில் செலுத்த அறிவுறுத்தினர். அதனை ஏற்காத அவர்கள் கலெக்டரிடம் தான் கொடுப்போம் என்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் காத்திருந்தனர். அதுமட்டுமின்றி நேற்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாகவே காணப்பட்டது. கூட்டம் முடிந்து அமைச்சர்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள் சென்ற பிறகு அங்கு காத்திருந்த பொதுமக்கள் திடீரென கலெக்டர் முருகேசை சூழ்ந்து கொண்டு போட்டி, போட்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அவரிடம் அளித்தனர். இதனால் அங்கிருந்த அரசு அதிகாரிகள் செல்வது அறியாமல் திகைத்தனர்.

 கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நடைபெற்ற ஆய்வு கூட்டம் முடிந்த சில நிமிடங்கள் மக்கள் பலர் கலெக்டர் அலுவலகத்தில் சூழ்ந்து காணப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story