நெல்லையில் கோவில்கள் மீண்டும் திறப்பு
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து நெல்லையில் கோவில்கள் மீண்டும் திறக்கப்பட்டன. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை:
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து நெல்லையில் கோவில்கள் மீண்டும் திறக்கப்பட்டன. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அவ்வப்போது அமல்படுத்தப்படுகின்றன.
அதன்படி ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு இருந்த வழிபாட்டு தலங்கள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கோவில்கள் மீண்டும் திறப்பு
இதையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில், பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவில், சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், பாளையங்கோட்டை மேலவாசல் முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் நேற்று அதிகாலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்கள் மீண்டும் திறக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் நுழைவுவாயிலில் பக்தர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை செய்து, கைகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. நெல்லையப்பர் கோவிலில் உள்ள காந்திமதி யானைக்கு பக்தர்கள் பழங்கள் வழங்கி ஆசி பெற்றனர்.
கிறிஸ்தவ ஆலயங்கள்- பள்ளிவாசல்கள்
இதேபோன்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் நேற்று திறக்கப்பட்டன.
கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, ஆராதனை போன்றவையும், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story