கரூர் மாவட்டத்தில் பஸ்கள் ஓடின


கரூர் மாவட்டத்தில் பஸ்கள் ஓடின
x
தினத்தந்தி 6 July 2021 12:38 AM IST (Updated: 6 July 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததால் நேற்று முதல் பஸ்கள் ஓடின. மேலும் துணி, நகைக்கடைகள் திறக்கப்பட்டன.

கரூர்
போக்குவரத்து
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தாக்கம் அதிகரித்த நிலையில் கடந்த மே மாதம் 10-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுபோக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. 
இதில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது.   இதனையடுத்து நேற்று காலை கரூர் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு டிரைவர்கள், கண்டக்டர்கள் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. 
பஸ்கள் இயக்கம்
பின்னர் பஸ்கள் அனைத்தும் கரூர் பஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பயணிகள் முககவசம் அணிந்த பின்னரே பஸ்சில் ஏற்றப்பட்டனர். 50 சதவீத பயணிகள் மட்டுமே பஸ்சில் அனுமதிக்கப்பட்டன. மேலும் கரூர் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து பஸ்களுக்கும் கிருமி நாசினி அடிக்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
கரூர் பஸ் நிலையத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் காய்ச்சலுடன் யாரும் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்பதை கண்டக்டர்களிடம் அறிவுறுத்தினார். கரூர் மாவட்டத்தில் 82 சதவீத பஸ் போக்குவரத்து இயக்கப்படுகிறது. பயணிகளின் வருகையை பொருத்து பஸ்களின் எண்ணிக்கை நீடிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
துணி-நகைக்கடைகள் திறப்பு
இதேபோல கரூர் மாவட்டத்தில் பெரிய நகைக்கடைகள், துணிக்கடைகள் திறக்கப்பட்டன. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டன. மேலும் டீக்கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டு, அதில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டனர். உடற்பயிற்சி கூடங்கள், அருங்காட்சியகங்கள், வணிக வளாகங்களும் திறக்கப்பட்டு செயல்பட்டன.
டாஸ்மாக் 
கரூர் மாவட்டத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனையொட்டி டாஸ்மாக் கடைகள் முன்பு சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் சுண்ணாம்பு கலவையால் வட்டங்கள் இடப்பட்டு, பிளீச்சிங் பவுடன் தெளிக்கப்பட்டு இருந்தன. டாஸ்மாக் திறந்தவுடன் மதுப்பிரியர்கள் முக கவசம் அணிந்து வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Next Story