‘பிரதமரின் விருது கிடைத்ததற்கு மகிழ்ச்சி’
‘பிரதமரின் விருது கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று விருது பெற்ற பட்டுக்கோட்டை போலீஸ் ஏட்டு ராஜ்கண்ணன் கூறினார்.
பட்டுக்கோட்டை:
‘பிரதமரின் விருது கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று விருது பெற்ற பட்டுக்கோட்டை போலீஸ் ஏட்டு ராஜ்கண்ணன் கூறினார்.
மாணவரை காப்பாற்றினார்
பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ராஜ்கண்ணன்(வயது 35). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜனிடம் பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.
தஞ்சை மகர்நோன்பு சாவடியை சேர்ந்த ராம்குமார்(19) என்பவர் தஞ்சை எம்.கே. மூப்பனார் சாலையில் உள்ள புது ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அப்போது அந்த வழியாக பணிக்கு வந்து கொண்டிருந்த ராஜ்கண்ணன் 1 கிலோ மீட்டர் தூரம் ஆற்றில் நீந்தி சென்று ராம்குமாரை காப்பாற்றினார். அவரை அப்போதைய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் பாராட்டினார்.
உயிர்காப்பு விருது
இதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், பிரதமரின் உயிர்காப்பு விருதுக்கு ராஜ்கண்ணனின் பெயரை பரிந்துரை செய்து இருந்தார். அவரது சிபாரிசின் பேரில் 2018-ம் ஆண்டிற்கான வீர, தீர செயல்களுக்கான பிரதம மந்திரியின் உயிர்காப்பு விருது ராஜ்கண்ணனுக்கு கிடைத்ததுள்ளது.
தற்போது பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் ராஜ்கண்ணன், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
பேட்டி
விருது பெற்ற ராஜ்கண்ணன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
என்னுடைய சொந்த ஊர் ஒரத்தநாடு தாலுகா தென்னமநாடு கிராமம் ஆகும். என் மனைவி சரண்யா, ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.
எங்களுக்கு திவான்(5), தீரன்(2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். தஞ்சை ஆயுதப்படை போலீசில் 11 ஆண்டுகள் பணியாற்றி தற்போது பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் 6 மாதமாக பணியாற்றி வருகிறேன்.
விருது கிடைத்ததற்கு மகிழ்ச்சி
கடந்த 2015-ம் ஆண்டு தென்னமநாடு கிராமத்தில் இருந்து பணிக்கு தஞ்சைக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது தஞ்சையில் புதுஆற்றில் கல்லூரி மாணவர் விழுந்து நடு ஆற்றில் நீச்சல் தெரியாத நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
ஆற்றின் இரு கரைகளிலும் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் கூச்சலிடவே அந்த சமயத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்த நான், பொதுமக்களின் கூச்சல் கேட்டு இளைஞர் ஒரு வாலிபர் வெள்ளத்தில் அடித்துச் செல்வதை பார்த்தேன். உடனே ஆற்றில் குதித்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நீந்திச்சென்று அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தேன்.
இதை அறிந்த அப்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் பாராட்டியதோடு அவருடைய பரிந்துரைப்படி மாவட்ட கலெக்டர் எனக்கு விருதுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் பேரில் எனக்கு பிரதம மந்திரியின் வீரதீர செயல்களுக்கான உயிர்காப்பு விருது கிடைத்துள்ளது. எனது கடமையைச்செய்தேன். விருது கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story