கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தூக்குப்போட்டு ஊழியர் தற்கொலை


கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தூக்குப்போட்டு ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 6 July 2021 1:59 AM IST (Updated: 6 July 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

தீர்த்தஹள்ளி அருகே கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது சாவுக்கு பாட்டி, அக்காள் மகள் காரணம் என கடிதத்தில் கூறியுள்ளார்.

சிவமொக்கா: தீர்த்தஹள்ளி அருகே கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது சாவுக்கு பாட்டி, அக்காள் மகள் காரணம் என கடிதத்தில் கூறியுள்ளார். 
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:-

கிராம பஞ்சாயத்து ஊழியர்

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகாவில் உள்ளது, ஹாரோகூலிகே கிராம பஞ்சாயத்து. இங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் சச்சின் (வயது 30) என்பவர் கணினி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். 

இவரது சொந்த ஊர் தீர்த்தஹள்ளி அருகே கரசா கிராமம் ஆகும். இவர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 9ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். 

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் சச்சின் விடுமுறை இருந்தாலும் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அலுவலக அறையில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள், சச்சின் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீர்த்தஹள்ளி போலீசார் விரைந்த வந்து பார்வையிட்டனர். மேலும் தற்கொலை செய்த சச்சினின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக தீர்த்தஹள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 

அக்காள் மகள் மீது குற்றச்சாட்டு

மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பு சச்சின் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கடிதத்தில், எனக்கு எனது பாட்டியும், அக்காள் மகளும் தினமும் தொல்லை கொடுத்து வந்ததாகவும், எனது சாவுக்கு எனது அவர்கள் 2 பேரும் தான் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர்கள் 2 பேரும் என்ன தொல்லை கொடுத்து வந்தனர் என்பது தெரியவில்லை. 

தற்கொலை செய்த சச்சினுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் சச்சினை திருமணம் செய்ய அக்காள் மகள் வலியுறுத்தி வந்திருக்கலாம் எனவும், அதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

போலீஸ் விசாரணை

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story