மின்சாரம் தாக்கி மாணவன் பலி


மின்சாரம் தாக்கி மாணவன் பலி
x
தினத்தந்தி 6 July 2021 2:03 AM IST (Updated: 6 July 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

திருவிடைமருதூர் அருகே வயலில் புல் அறுக்க சென்ற போது மின்சாரம் தாக்கி மாணவர் இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருவிடைமருதூர்:
திருவிடைமருதூர் அருகே வயலில் புல் அறுக்க சென்ற போது மின்சாரம் தாக்கி மாணவர் இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 
மின்சாரம் தாக்கி பலி 
கும்பகோணம் அருகே உள்ள கல்யாணபுரம் கீழ தெருவைச்சேர்ந்த புருசோத்தமன் மகன் அகிலன்(வயது14). இவன் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று மாலை புல் அறுப்பதற்காக வீட்டிற்கு எதிரே உள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளான். அங்கு உயர் மின்னழுத்த கம்பி வயலில் படும்படி தாழ்வாக தொங்கி உள்ளது. இதனை கவனிக்காத அகிலன் மின்கம்பியில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். 
சாலைமறியல் 
தகவலறிந்த மின்சார வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பொதுமக்கள் தாழ்வாக சென்ற மின்கம்பியை தகவல் தெரிவித்தும் சரி செய்யாதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும், கலெக்டர் நேரில் வர வலியுறுத்தியும் பூம்புகார் கல்லணை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
பேச்சுவார்த்தை 
தகவல் அறிந்த கும்பகோணம் கோட்டாட்சியர் சுகந்தி சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து அகிலனின் உடல் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு  பாலகிருஷ்ணன், தாசில்தார் சந்தனவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதுகுறித்து  திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 மின்சாரம் தாக்கி உயிரிழந்த அகிலனுக்கு 2 சகோதரிகள் உள்ளனர். நேற்று காலையில் தான் அகிலனை 8-ம் வகுப்பிலிருந்து 9-ம் வகுப்பிற்கு பள்ளியில் பெற்றோர் சேர்த்து விட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story