கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்


கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 6 July 2021 2:53 AM IST (Updated: 6 July 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர்:

வழிபாட்டு தலங்கள்
கொரோனா ஊரடங்கால் தமிழக அரசு உத்தரவின்படி கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கில் அளிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளை தொடர்ந்து, நேற்று வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.
இதன்படி அரியலூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டிருந்த கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களும் திறக்கப்பட்டிருந்தன. அரியலூரில் உள்ள பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
பிரகதீஸ்வரர் கோவில்
இதேபோல் மீன்சுருட்டி அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு உலகப் பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் 84 நாட்களுக்கு பின்னர் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. கோவிலுக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி அறநிலையத்துறை சார்பில் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் கிருமிநாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்த பிறகு முக கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணியாத பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முக கவசம் வழங்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக கோவில் பிரகார நடைபாதையில் சுண்ணாம்பு கொண்டு வட்டமிட்டு பக்தர்கள் நிற்க வைக்கப்பட்டு, ஒருவர் பின் ஒருவராக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சிறுவர்கள், முதியவர்கள் கோவிலுக்கு வரவேண்டாம் என்று அறநிலையத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மீன்சுருட்டி பகுதியில் மற்ற வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டிருந்தன.
தா.பழூர், திருமானூர்
தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி கோபூஜை செய்து நடை திறக்கப்பட்டது. நேற்று காலை கோவில் நடை திறப்பதற்கு முன்பாக கோவில் ராஜகோபுர முகப்பில் கொரோனா பாதிப்பில் இருந்து உலக மக்கள் முழுவதுமாக விடுபடவும், தொடர்ந்து இனி தடையில்லாமல் அனைத்து கோவில்களிலும் பூஜைகள் நடைபெறவும், உலக மக்கள் அனைத்து நன்மைகளையும் அடையவும் வேண்டி பசுவுக்கும், கன்றுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் நடை திறக்கப்பட்டு பசுவும், கன்றும் மூலஸ்தானத்தில் இருக்கும் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனை தரிசனம் செய்த பின்னர் சிவபுராணம் முழங்க கோவில் பிரகாரத்தில் பிரதட்சணம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் குருக்கள் செந்தில் செய்து வைத்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில் நடை பக்தர்கள் வழிபாட்டிற்காக திறக்கப்படுவதால் முன்னதாக கோவில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியோடு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கோடாலிகருப்பூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், காரைக்குறிச்சி சவுந்தரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் நேற்று நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருமானூரில் உள்ள கைலாசநாதர் உடனுறை காமாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வழிபாடு செய்தனர்.

Next Story