எத்தனை தடைகள் வந்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவோம்; பசவராஜ் பொம்மை திட்டவட்டம்
பெங்களூரு நகரின் குடிநீருக்கான திட்டம் என்பதால் எத்தனை தடைகள் வந்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: பெங்களூரு நகரின் குடிநீருக்கான திட்டம் என்பதால் எத்தனை தடைகள் வந்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை திட்டம்
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்திற்காக ரூ.9 ஆயிரம் கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது.
ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதற்கு மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மந்திரி திட்டவட்டம்
இந்த நிலையில் எத்தனை தடைகள் வந்தாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக சட்டம் மற்றும் போலீஸ் துறை மந்திரி பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
எத்தனை தடைகள் வந்தாலும்...
“பெங்களூரு நகரின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மேகதாதுவில் புதிய அணைகட்டும் நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. மேகதாதுவில் அணைகட்டும் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும், அந்த திட்டம் குறித்த தகவல்கள் பற்றியும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா கடிதம் எழுதி இருந்தார். ஆனாலும் மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல.
முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு, மு.க.ஸ்டாலின் மேகதாதுவில் அணைகட்ட கூடாது என்று கடிதம் எழுதி இருப்பது சரியல்ல. அவர் அளித்திருக்கும் விளக்கமும் ஏற்கும் படியாக இல்லை. கர்நாடகத்தில் தொடங்கப்படும் எந்த திட்டமாக இருந்தாலும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதுபற்றி கர்நாடக அரசு கவலைப்பட போவதில்லை. எத்தனை தடைகள் வந்தாலும் மேகதாதுவில் அணைகட்டியே தீருவோம். ஏனெனில் இது குடிநீருக்காக தொடங்கப்படும் திட்டமாகும்.
பதில் சொல்ல வேண்டும்
மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை நேற்றோ, இன்றோ கர்நாடக அரசு செயல்படுத்த நினைக்கவில்லை. இந்த திட்டத்தை தொடங்க பல ஆண்டுகளாக கர்நாடக அரசு திட்டம் வகுத்து வருகிறது. மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை தொடங்குவது குறித்து கர்நாடக அரசுக்கு, மத்திய ஜல்சக்தி துறை கூட சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறது.
கடந்த 2012-ம் ஆண்டிலேயே மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக தொடங்கப்படும் திட்டம் என்று கர்நாடகம் கூறி வந்தாலும், தமிழக அரசு எதற்காக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அதுபற்றி பற்றி தமிழக அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story