மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஒத்துழைக்க வேண்டும்; குமாரசாமி வலியுறுத்தல்
மேகதாது அணைகட்டும் திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு அநியாயம் ஏற்படாது என்பதால், அந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: மேகதாது அணைகட்டும் திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு அநியாயம் ஏற்படாது என்பதால், அந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கர்நாடகத்தின் பொறுப்பு
மேகதாதுவில் அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதை கவனித்தேன். மேகதாதுவில் அணைகட்டும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால், 67 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்கும்படி அணைகட்டினால், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது என்று கருதுகிறது. மேகதாதுவில் அணைகட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது.
ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பது கர்நாடகத்தின் பொறுப்பு ஆகும். மேகதாதுவில் அணைகட்டுவது மின்சார உற்பத்திக்கு மட்டும் அல்ல, பெங்களூரு, கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காகத் தான். தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் அண்ணன், தம்பிகளாக இருந்து வருகிறாகள். மேகதாதுவில் அணைகட்டுவது என்பது கர்நாடக மககளின் கோரிக்கை ஆகும். கர்நாடக அரசின் விருப்பமாகும்.
அநியாயம் ஏற்படாது
மேகதாதுவில் அணைகட்டுவது நியாயமானது. அதனால் தமிழ்நாட்டுக்கு அநியாயம் ஏற்படாது. தமிழ்நாட்டுக்கு அநியாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கர்நாடகத்திற்கு இல்லை. மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அந்த தண்ணீர் தேவையில்லாமல் கடலில் கலக்கிறது. அந்த தண்ணீர் மேகதாதுவில் அணைகட்டி சேமித்து வைக்கப்படும். மழை குறைவாக பெய்தால், அங்கிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
மேகதாது அணையில் இருக்கும் தண்ணீர் பெங்களூரு, கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். மேகதாதுவில் அணைகட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால், அந்த திட்டத்தை எதிர்க்க வேண்டாம். காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையம் வழங்கிய தீர்ப்புப்படி தமிழகத்திற்கு ஆண்டுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் கொடுக்கப்படும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
ஒத்துழைப்பு அளிக்கும்படி...
ஒகேனக்கல்லில் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழக அரசு, மத்திய அரசிடம் அனுமதி மற்றும் நிதி உதவி பெற்று நிறைவேற்றியது. அந்த தண்ணீரை விவசாயத்திற்காக பயன்படுத்துகிறார்களா?. கர்நாடக எல்லைக்குள் மேகதாதுவில் அணைகட்டப்படுவது, கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் ஆகும். காவிரி நதிநீர் விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவை கர்நாடகம் மீறுவதில்லை.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மற்றொரு முறை வேண்டுகோள் விடுகிறேன், கன்னடர்களை சகோதரர்களாக நினைக்க வேண்டும். மேகதாதுவில் அணைகட்டும் விவகாரத்தில் உரிய முடிவு எடுத்து, தமிழகம்-கர்நாடகம் இடையே தொடர்ந்து நல்லுறவு நீட்டிக்க தமிழக முதல்-அமைச்சர் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story