பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு; மண்பாதை அடித்துச் செல்லப்பட்டது கடலூர்-அரியலூர் மாவட்டம் இடையே போக்குவரத்து துண்டிப்பு
பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மண்பாதை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் கடலூர்-அரியலூர் மாவட்டம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பெண்ணாடம்,
வெள்ளாறு
கடலூர்-அரியலூர் மாவட்டத்தை பிரிக்கும் வகையில் பெண்ணாடம் பகுதியில் வெள்ளாறு பாய்ந்தோடுகிறது. இதில் பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம்- அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு இடையே உள்ள வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிகமாக செம்மண்ணால் பாதை அமைத்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி, சின்னகொசப்பள்ளம், மாளிகைக்கோட்டம், அரியராவி, அகரம் நந்திமங்கலம், வடகரை உள்ளிட்ட கிராமங்கள், அரியலூர் மாவட்டத்தில் கோட்டைக்காடு, ஆலத்தியூர், தெத்தேரி, ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, முதுகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த மண்பாதையில் சென்று வந்தனர்.
அடித்துச் செல்லப்பட்டது
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளாற்று நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதில் ஆனைவாரி, உப்பு ஓடை ஆகிய ஓடை வழியாக பெருக்கெடுத்து வந்த நீர் வெள்ளாற்றில் கலந்தது. இதனால் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சவுந்திரசோழபுரம்- கோட்டைக்காடு இடையே உள்ள செம்மண் பாதை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இரு மாவட்டத்துக்கான வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேம்பாலம் கட்டும் பணி பாதிப்பு
இதற்கிடையே இதன் அருகிலேயே மேம்பாலம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் அந்த பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. வெள்ளத்தால் பாலம் கட்டும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தபாலம் பயன்பாட்டுக்கு வந்தால், எதிர்வரும் பருவமழை காலங்களில் இதுபோன்ற போக்குவரத்து தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்காது. எனவே இந்த பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story