சேலத்தில் 8 மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்: சமூகநலத்துறையில் 49 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்-அமைச்சர் கீதாஜீவன் தகவல்


சேலத்தில் 8 மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்: சமூகநலத்துறையில் 49 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்-அமைச்சர் கீதாஜீவன் தகவல்
x
தினத்தந்தி 6 July 2021 3:35 AM IST (Updated: 6 July 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

சமூக நலத்துறையில் 49 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சேலத்தில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

சேலம்:
சமூக நலத்துறையில் 49 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சேலத்தில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
நலத்திட்ட உதவி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களது குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பெற்றோர்களை இழந்த 6 குழந்தைகளுக்கு ரூ.24 லட்சம் மதிப்பிலான டெபாசிட் உத்தரவுகளை வழங்கினார். பின்னர் அவர், 100 பெண்களுக்கு திருமண உதவித் தொகையும் வழங்கினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சுமார் 73 ஆயிரம் குழந்தைகளுக்கு முதிர்வு தேதி முடிவடைந்தும் அவர்களுக்கு உண்டான உதவித்தொகை வழங்கப்படவில்லை. அதேபோல் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 பெண்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. சேலத்தில் இன்றைய தினம் நடந்த நிகழ்ச்சியில் கூட 2018-ல் திருமணம் முடிந்த பெண்ணுக்கு இப்போதுதான் உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. 
49 ஆயிரம் காலிப்பணியிடங்கள்
கொரோனாவால் தாய்- தந்தையை இழந்த குழந்தைக்கு ரூ.5 லட்சமும், தாய்- தந்தையில் யாராவது ஒருவரை இழந்தால் குழந்தைக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அந்த வகையில் சேலத்தில் முதற்கட்டமாக 6 குழந்தைகளுக்கு ரூ.24 லட்சம் டெபாசிட் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அவர்களது பள்ளி, கல்லூரி கல்வி கட்டண செலவை அரசே ஏற்றுக்கொள்ளும்.
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பெற்றோரை இழந்து 15 ஆயிரம் குழந்தைகள் தவிப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு முதலில் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் சமூக நலத்துறையில் காலியாக உள்ள 49 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பணியிடங்கள் தகுதியுள்ள பெண்களை கொண்டு நிரப்பப்படும்.
இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்களுக்கான மண்டல ஆய்வுக்கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
அரசு முதன்மை செயலாளர் சம்பு கல்லோலிகர், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குனர் அமுதவள்ளி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குனர் ரத்னா, சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குழந்தை திருமணம்
கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன், ஒவ்வொரு மாவட்டம் வாரியாக மாவட்ட சமூக நல அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர்கள், சமூக பாதுகாப்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட துறை அலுவலர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் கூட்டத்தில்  அமைச்சர் பேசுகையில், அந்தந்த மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். இதுதொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
முன்னதாக நடந்த புத்தாக்க பயிற்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் சட்டங்கள் குறித்து துறை அலுவலர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இதில் 8 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட சமூக நல அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர்கள், மாவட்ட சமூக பாதுகாப்பு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story