மது போதையில் ரகளை: ரெயில்வே ஊழியர்கள் 2 பேர் மீது வழக்கு


மது போதையில் ரகளை: ரெயில்வே ஊழியர்கள் 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 July 2021 4:28 PM IST (Updated: 6 July 2021 4:28 PM IST)
t-max-icont-min-icon

மது போதையில் ரகளையில் ஈடுப்பட்ட ரெயில்வே ஊழியர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் சமீபகாலமாக ரெயில்வே உதிரி பாகங்கள் திருட்டுப் போவதாக போலீசாருக்கு புகார்கள் வருகின்றன. இதுதொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திர குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இதுதொடர்பாக கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களான தூத்துக்குடி மாவட்டம் லட்சுமிபுரத்தை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 28) மற்றும் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த சண்முகராஜா (25) ஆகியோர் பணியின் போது மதுபோதையில் ரகளை செய்ததாக கூறப்படுகிறது. அங்கு வந்த போலீசார், ரெயில்வே ஊழியர்கள் 2 பேரையும் கண்டித்தனர். இதனால் ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பணியின்போது மது அருந்தி ரகளையில் ஈடுபட்டதாக பேச்சிமுத்து, சண்முகராஜா ஆகியோர் மீது ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story