தொழிலாளியை தாக்கிய 5 பேர் கைது
தேவதானப்பட்டி அருகே தொழிலாளியை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி :
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர் முத்து வேல் பாண்டி (வயது 39). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பராசக்தி.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மேலத்தெருவை சேர்ந்த குமார் (28), மருதுபாண்டி (30) மற்றும் அவரது நண்பர்கள் ஒரு மோட்டார்சைக்கிளில் காலனி தெரு வழியாக வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது முத்துவேல் பாண்டி அவர்களை மெதுவாக செல்லும்படி கூறினார். இதில் ஆத்திரமடைந்த குமார் மற்றும் அவரது நண்பர்கள் நேற்று முன்தினம் இரவு முத்துவேல் பாண்டி வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக தெரிகிறது.
இதில் முத்துவேல் பாண்டி, உறவினர்களான காளிமுத்து, சுப்பிரமணி ஆகியோரை அவர்கள் தாக்கினர். பின்னர் முத்துவேல் பாண்டி மனைவி பராசக்தியின் சேலையை இழுத்து மானப்பங்கப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் படுகாயமடைந்த முத்துவேல் பாண்டி, காளிமுத்து ஆகியோரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், மருதுபாண்டி உள்பட 5 பேரை கைது செய்தனர். சம்பவ நடந்த இடத்திற்கு தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story