ஊட்டியில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு


ஊட்டியில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 6 July 2021 9:50 PM IST (Updated: 6 July 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் வியாபாரியை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி,

ஊட்டி காந்தல் நாயக்கன் தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட்(வயது 50). அதே பகுதியில் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டு சுவரில் தகர செட் பொருத்தும் பணி நடந்தது. அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த மதுசூதனன்(40) என்பவர், தகர செட் பொருத்தும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு இடையூறு செய்து தகாத வார்த்தைகளை பேசியதாக தெரிகிறது. 

மேலும் கடைக்கு சென்ற மதுசூதனன், அங்கிருந்த ஆல்பர்ட்டை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். மேலும் அவரை அரிவாளால் வெட்டினார். இதில் ஆல்பர்ட்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். 

உடனே கொலை மிரட்டல் விடுத்துவிட்டு மதுசூதனன் தப்பி ஓடிவிட்டார். பின்னர் ஆல்பர்ட்டை அவர்கள் மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊட்டி நகர மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுசூதனனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story