திண்டுக்கல்லில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்:
பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல்லில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.
இதில் மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜாபேகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் வேங்கை ராஜா, சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகில் இருந்து தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று குமரன்பூங்காவில் நிறைவுபெற்றது. இதையடுத்து அங்கு அவர்கள் விறகு அடுப்பில் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்தும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டம்
அதேபோல் திண்டுக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார், ராமநாதன், தனசாமி, முருகேசன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். மோட்டார் வாகன திருத்த சட்டம், இன்ஸ்சூரன்ஸ் கட்டணம் உயர்வு ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அதேபோல் மனிதநேய மக்கள் கட்சியினர் திண்டுக்கல் யானைதெப்பத்தில் இருந்து பேகம்பூர் தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையில் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோவை தள்ளிக் கொண்டும், கியாஸ் சிலிண்டரை பாடையில் சுமந்து கொண்டும் சென்றனர். இதையடுத்து தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சேக்பரீத் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் பாரூக், பொருளாளர் நஜிபுர்ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பழனி
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ. சங்கம் சார்பில் பழனி குளத்து ரோடு ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சாலை போக்குவரத்து தொழிற்சங்க மாவட்ட தலைவர் பிச்சமுத்து தலைமை தாங்கினார். பழனி ஆட்டோ சங்க பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story