கடந்த ஆட்சியில் திருமண உதவித்தொகை முறையாக வழங்கவில்லை: தமிழகத்தில் 3¼ லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன-அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் முறையாக வழங்கப்படாததால் 3 ஆண்டுகளில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
கிருஷ்ணகிரி:
திருமண உதவித்தொகை
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார்.
செல்லக்குமார் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திட்டங்கள்
தமிழக முதல்-அமைச்சர் ஏழை, எளிய பெண்கள், பணிக்கு செல்லும் மகளிர், கல்வி படிக்கும் மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், அவர்களின் வாழ்வாதாரம் உயரவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
மகளிருக்கு நகர பஸ்களில் கட்டணமில்லா பயணம், பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண தொகை உள்ளிட்ட திட்டங்களை பதவி ஏற்ற முதல் நாளிலேயே முதல்-அமைச்சர் அறிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 510 பெண்களுக்கு ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பில் திருமண நிதி உதவி தொகை, ரூ.1 கோடியே 92 லட்சத்தில் 4 ஆயிரத்து 80 கிராம் தாலிக்கு தங்கம் என்று மொத்தம் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் திருமண நிதி உதவி தொகை மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் முதல் கட்டமாக வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண்கள் சேவை மையம்
தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 10 பெண்கள் வீதம் 100 ஏழை பெண்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் திருமண நிதி உதவி மற்றும் ரூ.37 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் 800 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
முன்னதாக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்தை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, வருவாய் அலுவலர் சதீஷ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.செங்குட்டுவன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முறையாக வழங்கவில்லை
திருமண உதவி தொகை திட்டத்தின் கீழ், தாலிக்கு தங்கம் கடந்த ஆட்சியில் முறையாக வழங்கப்படவில்லை. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2018-2019, 2019-2020, 2020-2021 கால கட்டங்களில் தமிழகம் முழுவதும் பெறப்பட்ட 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதற்கு 2 ஆயிரத்து 703 கோடி நிதி வேண்டும். கொரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உரிய நிவாரண உதவித்தொகை வழங்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கொரோனா தொற்றால் இறந்ததற்கான ஏதேனும் ஒரு சான்று வழங்கினால் கூட உதவித்தொகையை உடனடியாக பெற முடியும். குழந்தை திருமணங்களை தடுக்க கிராம அளவில் குழுக்கள் அமைக்கப்படும். தற்போது சமூக நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் பணி நியமனத்திற்கு சிலரிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக புகார்கள் இருந்தால் காவல் துறையிடமோ, அல்லது மாவட்ட கலெக்டரிடமோ தெரிவித்தால் ஏமாற்றிய நபர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story