அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை:12-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகம்
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு வருகிற 12-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி:
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கலை பயிற்சி
கலை பண்பாட்டு துறையின் கீழ் கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குரலிசை (பாட்டு), தவில், நாதஸ்வரம், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி நேரம் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும். 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இந்த பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெறலாம். சேர்க்கைக்கு கல்வி தகுதியாக 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாதஸ்வரம், தவில், தேவார பிரிவுகளில் சேர்க்கை பெற எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. பயிற்சி காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
விண்ணப்பிக்கலாம்
பயிற்சி முடிவில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு கட்டணம் இல்லை. சேர்க்கை கட்டணமாக ஆண்டிற்கு ரூ.120 மட்டும் செலுத்த வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய சலுகை வழங்கப்படும். மேலும், உதவித்தொகையாக மாதம் ரூ.400 வழங்கப்படும்.
இந்த இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு வருகிற 12-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, பெங்களூரு சாலை (பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பு எதிரில்), கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரிலோ அல்லது சுய முகவரியிட்ட அஞ்சல் உறையை இணைத்து அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story