பொள்ளாச்சியில் மீண்டும் மாட்டு சந்தை தொடக்கம்
பொள்ளாச்சியில் 2½ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாட்டு சந்தை தொடங்கப்பட்டு உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் 2½ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாட்டு சந்தை தொடங்கப்பட்டு உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சந்தை இடமாற்றம்
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை செயல்பட்டு வந்தது. இதற்கிடையில் சந்தை நடந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்கு சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி தொடங்கியது. இதை தொடர்ந்து அருகில் உள்ள இடத்திற்கு சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சந்தை நடத்துவதற்கு போதிய இடவசதிகள் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து திப்பம்பட்டிக்கு மாட்டு சந்தை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடமாற்றம் செய்யப்பட்டது.
அங்கு தனியார் இடத்தில் சந்தை நடைபெற்று வந்தது. இதற்கிடையில் பொள்ளாச்சி சந்தையில் மின் விளக்குகள், தண்ணீர் தொட்டி, கற்களால் தளம் அமைத்தல் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் அதன்பிறகும் பொள்ளாச்சியில் சந்தையில் நடைபெறவில்லை.
மாடுகள் விற்பனை
இந்த நிலையில் நகராட்சி மூலம் சந்தையை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் சந்தையில் போதிய வசதிகள் உள்ளதால் வியாபாரிகள் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து கொள்ளலாம் என்று நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 2 ½ ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் மாட்டு சந்தை தொடங்கியது. நேற்று செவ்வாய்கிழமை என்பதால் வியாபாரிகள் மாடுகளை சந்தைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறியதாவது:-
கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000 மாடுகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து காளை, எருமை, ஜெர்சி உள்ளிட்ட இனங்களை சேர்ந்த மாடுகள் விற்பனை நடந்தது.
இதில் காங்கயம் காளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையும், காங்கயம் பசு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், ஜெர்சி ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், கர்நாடகா எக்சப் இனம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், மொரா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விலை போனது. சந்தைக்கு கேரளா, தமிழகத்தை சேர்ந்த 200 வியாபாரிகள் வந்திருந்தனர்.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாட்டு சந்தை நடைபெறும். 2½ ஆண்டுகளுக்கு பிறகு மாட்டு சந்தை தொடங்கியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கூடுதலாக இடம் ஒதுக்கப்படும்
இதுகுறித்து நகராட்சி ஆணையர் காந்திராஜ் கூறியதாவது:-
மாட்டு சந்தை நடத்துவதற்கு தற்போது 4.65 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் அருகில் உள்ள 2 ஏக்கர் நிலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கூடுதலாக மாடுகள் வந்தால், தேவைப்பட்டால் அந்த இடத்தையும் மாட்டு சந்தை நடத்துவதற்கு ஒதுக்கப்படும். சந்தையில் மின் விளக்கு, தண்ணீர் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. மாடுகளை பரிசோதனை செய்வதற்கு கால்நடை டாக்டர் ஒருவரும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story