டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுமி பலி


டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுமி பலி
x
தினத்தந்தி 6 July 2021 11:20 PM IST (Updated: 6 July 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுமி பலியானாள்.

ராமநாதபரம்,

ராமநாதபுரத்தை அடுத்துள்ள பேராவூர் அருகே உள்ளது மரப்பாலம். இந்த பகுதியில் புல்லங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனீஸ்வரன் என்பவர் செங்கல் காளவாசல் வைத்து நடத்தி வருகிறார். இதில் சிவகங்கை மாவட்டம் புலவர் மருதங்குடி பகுதியை சேர்ந்த சிலர் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு வேலை பார்த்து வரும் கார்த்தி-ஜோதி தம்பதியினரின் மகள் பிரியங்கா (வயது7) என்பவர் நேற்று பிற்பகலில் அங்கிருந்து நடந்து மெயின்ரோட்டில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்றுள்ளார். கடையில் மிட்டாய் வாங்கி கொண்டு காளவாசல் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் பின்னால் டிராக்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென்று டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து சிறுமி பலியானாள். விபத்தை பார்த்த அதே பகுதியை சேர்ந்த பாண்டி மகன் விநாயகமூர்த்தி(7) கத்தி கூச்சலிடவே அனைவரும் ஓடி வந்து உள்ளனர். அதற்குள் டிராக்டர் டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டுதப்பி ஓடிவிட்டார். இறந்து கிடந்த சிறுமியின் உடலை கண்டு பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான டிரைவரை தேடிவருகின்றனர்.



Next Story