பா.ஜ.க. கூட்டணியால் தேர்தலில் தோல்வி அடைந்தோம்


பா.ஜ.க. கூட்டணியால் தேர்தலில் தோல்வி அடைந்தோம்
x
தினத்தந்தி 7 July 2021 12:24 AM IST (Updated: 7 July 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.கூட்டணியால் தேர்தலில் தோல்வி அடைந்தோம் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திண்டிவனம் அருகே குருவம்மாபேட்டை கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க.வினர் மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து,  ஆட்சிக்கு வந்துள்ளனர். தி.மு.க. தான் ஆட்சிக்கு வர வேண்டும், என்று பெருவாரியான பொதுமக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை, மாற்றத்தை விரும்பிய மக்கள், நாம் எடுத்த முடிவுகள் ஆகியனவும் காரணமாயிற்று. 
முடிவு என்றால் கூட்டணி. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நாம் 3-வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருப்போம். ஆனால் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பா.ஜ.க. கூட்டணி தான்.  இதனால் முழுமையாக நாம் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து விட்டோம். 

கோபம் இல்லை

சிறுபான்மையினர் மக்களுக்கு நம் மீதோ, நம் இயக்கத்தின் மீதோ எந்த வருத்தமும், கோபமும் இல்லை. கொள்கை ரீதியாக அவர்கள் பா.ஜ.க.வோடு முரண்பட்டு இருந்தார்கள். அவர்கள் பா.ஜ.க.வை  கொள்கை ரீதியாக ஏற்று கொள்ளவில்லை.
 இதனால் நாம் அவர்களோடு வைத்த கூட்டணியால் மிகப்பெரிய இழப்பை நாம் சந்திக்க நேரிட்டது. இதற்கு ஒரே உதாரணம் நான் போட்டியிட்ட விழுப்புரம் தொகுதி.  விழுப்புரம் தொகுதியில் சுமார் 20 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளது. இதில் 18 ஆயிரம் வாக்குகள் விழுப்புரம் நகரத்தில் உள்ளது. ஆனால் 300 வாக்குகள் கூட எனக்கு கிடைக்கவில்லை. 16 ஆயிரம் வாக்குகள் நகரத்தில் குறைந்திருந்தாலும், கிராமங்களில் வாக்குகளை பெற்றிருக்கிறோம்.  இந்த உதாரணம் தான் தமிழகம் முழுவதிலும் நடந்தது. இந்த வாக்குகள் மாறியிருந்தால் நிலைமை வேறு, ஆட்சியே வேறு. 

தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகள்

பா.ம.க. கட்சியோடு கூட்டணி இருந்த காரணத்தால் நாம் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளை நம்மால் பெற முடியவில்லை. அது அவர்களுக்குள் கொள்கை ரீதியான முரண்பாடு. ஆனால் கூட்டணி கட்சியில் எல்லோரும் நன்றாக செயல்பட்டோம். அதனால் தான் இந்த நிலையிலும் வலுவான எதிர்கட்சியாக இருக்கிறோம்.
 வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிவர்மன், அமைப்புசாரா ஒட்டுனர் அணி மாவட்ட செயலாளர் எண்டியூர்விநாயகம், மேற்கு அவைதலைவர் தீபம்குமார், ஒன்றிய பொருளாளர் தென்பசியார் ராம்குமார்,  பேரவை ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதிகள் மாணிக்கம், கீழ்சித்தாமூர் முருகன், மாணவரணி செயலாளர் குமரவேல், விவசாய அணி செயலாளர் ஆதிபகவான், இலக்கிய அணி செயலாளர் பிரேம்குமார், பாசறை செயலாளர் ராஜா, ஒன்றிய இணை செயலாளர் கோமதியுவராஜா, கிளை செயலாளர் ரீத்து என்கிற நரேந்திரபிரபு,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story