மேலப்பாளையத்தில் சாலையில் நடந்த ஆட்டுச்சந்தை
மேலப்பாளையத்தில் சாலையில் ஆட்டுச்சந்தை நடந்தது. பொதுமக்கள் பலர் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
நெல்லை:
மேலப்பாளையத்தில் சாலையில் ஆட்டுச்சந்தை நடந்தது. பொதுமக்கள் பலர் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
மேலப்பாளையம் சந்தை
நெல்லை மேலப்பாளையத்தில் டக்கரம்மாள்புரம் சாலையில் மாநகராட்சி கால்நடை சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தை கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டது. 2 மாதங்களுக்கு மேல் மேலப்பாளையம் சந்தை மூடிக்கிடக்கிறது.
இந்த சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படும். இங்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இதே போல் பல்வேறு வகையான பொருட்களை வியாபாரிகள் கொண்டு வந்து வியாபாரம் செய்வார்கள்.
சாலையில் விற்பனை
தற்போது கொரோனா பரவல் குறைந்திருப்பதால் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து முழுமையாக நடைபெற்று வருகிறது. ஓட்டல்கள், டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிடுவதுடன், பூங்காக்களும் திறக்கப்பட்டு உள்ளன.
இதையொட்டி மேலப்பாளையம் சந்தை உள்ளிட்ட கால்நடை சந்தைகளும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சந்தைகளை திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தைக்கு நெல்லை மாவட்டம் மற்றும் தென்காசி, தூத்துக்குடி, மதுரை, தேனி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் கொண்டுவரப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
இந்த நிலையில் மேலப்பாளையத்தில் சந்தை நாளான நேற்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வழக்கம் போல் தங்களது ஆடுகளை விற்பனைக்காக மேலப்பாளையம் சந்தை பகுதிக்கு கொண்டு வந்தனர். சந்தை அருகில் உள்ள சாலை மற்றும் காலி மைதானத்தில் ஆடுகளை நிறுத்தி விற்பனை செய்தனர். அதனை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கிச்சென்றனர். ஆடுகளின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வழக்கத்தைவிட குறைவான ஆடுகள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.
அனைத்து சந்தைகளையும் திறக்க வேண்டும்
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘தற்போது ஊரடங்கால் சந்தைகள் திறக்கப்படவில்லை. அதனால் பண்டிகைக்கு தேவைப்படும் ஆடுகளை பொது மக்கள், கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பண்ணைகளை தேடிச் சென்று வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் வியாபாரம் மந்தமாகவே நடைபெற்று உள்ளது. எனவே கால்நடை சந்தைகள், வாரச்சந்தைகளை அரசு திறக்க அனுமதி அளிக்க வேண்டும்’’ என்றனர்.
Related Tags :
Next Story