முன்னாள் ராணுவ வீரர் மர்மநபர்களால் குத்திக்கொலை


முன்னாள் ராணுவ வீரர் மர்மநபர்களால் குத்திக்கொலை
x
தினத்தந்தி 7 July 2021 12:33 AM IST (Updated: 7 July 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் மர்மநபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

மோகனூர், ஜூலை.7-
மோகனூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் மர்மநபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
முன்னாள் ராணுவ வீரர்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ராசிகுமரிபாளையம் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40), இவர், கடந்த 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பணி ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பிய அவர், மனைவி குழந்தையுடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் மோகனூரை அடுத்த பரளி மல்லுமாச்சம்பட்டியில் உள்ள அக்காள் சித்ரா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சிவகுமார் சென்றுள்ளார். இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர்.
காயங்களுடன் பிணம்
இதற்கிடையே நேற்று காலை 7 மணி அளவில் வளையப்பட்டி சாலையில் உள்ள செவிட்டுரங்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகில் சிவகுமார் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகில் அவர் ஓட்டிச் சென்ற மொபட் கிடந்தது.
இந்த தகவல் அறிந்தவுடன் சிவகுமார் மனைவி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
குத்திக்கொலை
கொலை குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ் (நாமக்கல்), ராஜாரணவீரன் (பரமத்திவேலூர்), முத்துகிருஷ்ணன் (நில அபகரிப்பு பிரிவு), மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சிவகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவகுமாரை மர்மநபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். ஆனால் கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்ற எந்த விவரமும் உடனடியாக தெரியவில்லை.
காரணம் என்ன?
ஏனென்றால் சிவகுமார், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று 4 மாதங்கள்தான் ஆகிறது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையா? அல்லது சொத்து பிரச்சினையா, வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் ராணுவ வீரர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கொலையுண்ட சிவகுமாருக்கு பார்கவி என்ற மனைவியும், லினிஷா என்ற 4 வயது மகளும் உள்ளனர்.

Next Story