வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 7 அதிகாரிகள் மீது வழக்கு
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 7 அரசு அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர்:
முறைகேடு புகார்
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்காக மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு பெறப்படும் கடன் உதவியில் பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொட்டரை ஊராட்சியில் போலி பயனாளிகளின் பெயரில் கணக்குகளை உருவாக்கி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதனை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். இதையடுத்து, சுமார் ரூ.4 லட்சத்துக்கு மேல் முறைகேடு நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
7 பேர் மீது வழக்கு
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறும் 2019-2020 -ம் ஆண்டில் பணியாற்றிய ஒன்றிய மேற்பார்வையாளர்கள் ஜெய்சங்கர், மதினா, இளநிலை பொறியாளர் ராஜபாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரன், ஜூலி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கொட்டரை ஊராட்சி செயலாளர் சகுந்தலா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குற்ற சதி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் பலர் தற்போது வேறு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்த முறைகேடு தொடர்பாக விரைவில் உரிய விசாரணை மேற்கொள்ள உள்ளதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் தெரிவித்தனர். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய அரசு அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story