டெய்லர் மர்ம சாவு


டெய்லர் மர்ம சாவு
x
தினத்தந்தி 7 July 2021 1:27 AM IST (Updated: 7 July 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே தண்டவாள பகுதியில் டெய்லர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

நாகர்கோவில், 
நாகர்கோவில் அருகே தண்டவாள பகுதியில் டெய்லர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
மேலும் இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தண்டவாள பிணம்
நாகர்கோவில் புத்தேரி ரெயில் தண்டவாளம் அருகே நேற்று காலை ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்ேபரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். முதலில் பிணமாக கிடந்தவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. 
இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் போலீசார் சோதனை நடத்திய போது, பிணம் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் நின்றது. அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். 
அந்த ஆவணம் மூலம் விசாரணை நடத்தியதில், பிணமாக கிடந்தவர் கட்டையன்விளையை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 44) என்பது தெரியவந்தது. அவா் டெய்லர் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
எப்படி இறந்தார்?
ஆனால் சதீஷ்குமார் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. ஏன் எனில் சதீஷ்குமாரின் உடல் தண்டவாளத்தின் அருகே மீட்கப்பட்டது. ஆனால் அவரது உடலில் பெரிய அளவிலான காயங்கள் இல்லை. ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருந்தாலோ அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இறந்திருந்தாலோ உடல் சிதைந்து இருக்கும். ஆனால் சதீஷ்குமாருக்கு தலையில் மட்டும் காயம் இருந்தது. 
இதுபற்றி ரெயில்வே போலீசாரிடம் கேட்டபோது, “சதீஷ்குமார் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்திருக்க வேண்டும். அப்போது ரெயில் அவா் மீது லேசாக உரசி இருக்கலாம். இதனால் தலையில் மட்டும் அடிபட்டு சதீஷ்குமார் இறந்திருக்கலாம்” என்றனர். மேலும் சதீஷ்குமார் நேற்று முன்தினம் இரவு தன் மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு கோபத்தில் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் சதீஷ்குமார் எப்படி இறந்தார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story