மாணவர்களுக்கு பாடப்புத்தகத்துடன் விதை பந்து வழங்கிய ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடப்புத்தகத்துடன் விதை பந்து வழங்கினர்.
கரூர்
கொரோனாவில் இருந்து மாணவர்களை காக்கும் பொருட்டு கடந்த 1 வருடத்துக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கரூர் காந்தி கிராமம் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை 115 மாணவ, மாணவிகள் புதிதாக சேர்ந்துள்ளனர். மாணவர் சேர்க்கையின் போது மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களுடன், அவர்களுக்கு தலா 5 விதைப் பந்துகளையும் ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர். இதற்காக வேம்பு, புங்கை உள்ள தரமான 500 விதை பந்துகளை தருவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி தொலைக்காட்சி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளின் அட்டவணையும் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் பூங்கொடி கூறுகையில், மாணவ சமுதாயத்திற்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதைப்போல மனித சமுதாயத்திற்கு மரங்கள் அவசியம் என்பதை மாணவ பருவத்திலேயே அவர்கள் உணர்வதற்கும், அதன்மூலம் இயற்கை வளங்களை பெருக்கவும், பூமி வெப்பமயமாவதை தடுக்கும் வகையிலும், இந்த திட்டம் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விதை பந்துகளை மாணவர்கள் தாங்கள் வசிக்கும் வீடுகள் அல்லது அவர்கள் வசிக்கும் பகுதிகளில் நட்டு பராமரிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பராமரிக்கப்படும் அந்த மரங்களுக்கு மாணவ, மாணவியரின் பெயரை சூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
Related Tags :
Next Story