மாட்டுத்தரகர்கள் 2 பேர் பலி


மாட்டுத்தரகர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 7 July 2021 1:53 AM IST (Updated: 7 July 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதலில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதலில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாட்டுத்தரகர்கள்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள பழைய வேலாயுதம் பண்ணையை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 55). ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள ஜெகவீரப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). இவர்கள் இருவரும் மாட்டுத்தரகர்கள். மேலும் மாட்டு வியாபாரமும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் தங்கள் சொந்த ஊரில் இருந்து விருதுநகர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை ரவிச்சந்திரன் ஓட்டிவர மாரியப்பன் பின்னால் அமர்ந்திருந்தார்.
 2 பேர் பலி
மோட்டார் சைக்கிள் விருதுநகர் - சாத்தூர் ரோட்டில் எட்டூர்வட்டம் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே விருதுநகரிலிருந்து சாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த மாரியப்பன் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
 படுகாயமடைந்த ரவிச்சந்திரன் உடனடியாக தீவிர சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
வழக்குப்பதிவு
மோதிய காரை ஓட்டி வந்த நபர் காரை அங்கேயே விட்டு, விட்டு தப்பி ஓடி விட்டார். அந்தக் கார் சாத்தூர் அருகே உள்ள நத்தத்துப்பட்டியை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்தது.  காரை அவரே ஓட்டி வந்தாரா அல்லது வேறு டிரைவர் ஓட்டி வந்தாரா என்பது தெரியவில்லை. இதுபற்றி வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story