மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்; எடியூரப்பா உறுதி


முதல்-மந்திரி எடியூரப்பா.
x
முதல்-மந்திரி எடியூரப்பா.
தினத்தந்தி 7 July 2021 2:59 AM IST (Updated: 7 July 2021 2:59 AM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த சாத்தியமில்லை என்றும், அந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா உறுதியாக தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த சாத்தியமில்லை என்றும், அந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா உறுதியாக தெரிவித்துள்ளார்.

கேமதாது அணை விவகாரம்

காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வதில் கர்நாடகம்-தமிழகம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. தற்போது காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணைகட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளையும் ஆரம்பித்துள்ளது. ஆனால் மேகதாதுவில் அணைகட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

 இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கும் தொடர்ந்துள்ளது. கடந்த 3-ந் தேதி மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கூறி தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா கடிதம் எழுதி இருந்தார்.

இதற்கு பதில் கடிதம் எழுதிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேமதாதுவில் அணைகட்டுவதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும், அதனால் அணைகட்டும் விவகாரத்தை கைவிடும்படி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இதையடுத்து, மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்க கூடாது என்று மந்திரிகளும், எதிர்க்கட்சி தலைவர்களான சித்தராயைா, குமாரசாமியும் கூறியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பெங்களூரு விதானசவுதாவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

திட்டம் செயல்படுத்தப்படும்

மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தும். இந்த விவகாரத்தில் கர்நாடக மக்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். எந்த ஒரு காரணத்திற்காகவும் மேகதாதுவில் அணைகட்டும் திட்டம் நிறுத்தப்படாது. சட்டத்தின்படியே மேகதாதுவில் கர்நாடக அரசு அணையை கட்டி முடிக்கும். மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை செயல்படுத்துவதை, யாராலும் தடுத்து நிறுத்த சாத்தியமில்லை.

மேகதாதுவில் அணைகட்டும் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சருக்கு நான் கடிதம் எழுதி வைத்திருந்தேன். தமிழக அரசின் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் கடிதம் எழுதி இருந்தேன். ஆனால் தமிழக அரசிடம் இருந்து, சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. கேமதாதுவில் அணைகட்டும் திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.

எடியூரப்பா அஞ்சலி

மறைந்த பாபு ஜெகஜீவனராம், சமூக சேவையில் ஈடுபடுவதற்காக தன்னையே அர்ப்பணித்து கொண்டவர். கர்நாடகத்தில் நிலவிய உணவு தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் முக்கிய நபராக நிகழ்ந்தவர் தான் பாபு ஜெகஜீவனராம் ஆவார். அவர் நம்மை விட்டு சென்றிருந்தாலும், கர்நாடகத்திற்காக அவர் ஆற்றிய சேவைகளை என்றும் மறந்து விட முடியாது.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

பாபு ஜெகஜீவனராமுக்கு நேற்று நினைவு தினம் என்பதால், விதானசவுதா வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த, அவரது உருவப்படத்திற்கு முதல்-மந்திரி எடியூரப்பா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருந்தனர்.

எந்த பாதிப்பும் ஏற்படாது

இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு மேகதாது அணை விவகாரம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், மேகதாதுவில் அணைகட்டும் விவகாரத்தால் தமிழகம், கர்நாடகம் ஆகிய 2 மாநிலங்களுக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்பது குறித்து தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி அனுப்புவதன் மூலம் தெரிவித்திருந்தேன். 

நான் கூறிய கருத்துகளை தமிழக அரசு புரிந்து கொள்ளவில்லை. கேமதாதுவில் அணைகட்டும் திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று, அந்த மாநில முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை தொடங்க தேவையான நடவடிக்கைகள் கர்நாடக அரசு சார்பில் எடுக்கப்படும். கூடிய விரைவில் அணைகட்டும் திட்டம் செயல்படுத்தப்படும், என்று எடியூரப்பா கூறி இருந்தார்.

Next Story