மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு- நீர்மட்டம் குறைந்ததால் பாறைகள் வெளியே தெரிகின்றன
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நீர்மட்டம் குறைந்ததால் அணையில் பாறைகள் வெளியே தெரிகின்றன.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நீர்மட்டம் குறைந்ததால் அணையில் பாறைகள் வெளியே தெரிகின்றன.
மேட்டூர் அணை
டெல்டா பாசனத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. கடந்த மாதம் 12-ந் தேதி அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
தண்ணீர் திறப்பு குறைப்பு
இதன்படி நேற்று காலை முதல் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட, நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 79.59 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 78.31 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 674 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
பாறைகள் தெரிகின்றன
நீர்மட்டம் குறைந்துள்ளதால் மேட்டூர் அணையின் வலது கரை பகுதியில் தண்ணீரில் மூழ்கி இருந்த பாறைகள் வெளியே தெரிய தொடங்கி உள்ளன. அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story