துணை முதல்-மந்திரியின் மகன் கார் மோதி விவசாயி சாவு
பாகல்கோட்டை அருகே துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதியின் மகன் கார் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது. குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக உறவினர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
பாகல்கோட்டை: பாகல்கோட்டை அருகே துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதியின் மகன் கார் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது. குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக உறவினர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
சிதானந்த் சவதி
கர்நாடக துணை முதல்-மந்திரியாகவும், போக்குவரத்து துறை மந்திரியாகவும் பணியாற்றி வருபவர் லட்சுமண் சவதி. இவரது மகன் சிதானந்த் சவதி. இந்த நிலையில் சிதானந்த் சவதி தனது நண்பர்கள் 10 பேருடன் 2 காரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொப்பல் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. கொப்பல் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றிபார்த்துவிட்டு 2 கார்களில் சிதானந்த் சவதியும், அவரது நண்பர்களும் பெலகாவி மாவட்டம் அதானிக்கு வந்து கொண்டு இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 6.30 மணிக்கு பாகல்கோட்டை மாவட்டம் உனகுந்து தாலுகா கூடலசங்கமா கிராஸ் அருகே சித்ரதுர்கா-சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சிதானந்த் சவதியின் கார் அதிவேகமாக வந்து கொண்டு இருந்தது.
மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் சாலையை கடக்க முயன்று உள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் சிதானந்த் சவதியின் கார் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடினார்.
அவரை சிதானந்த் சவதியும், அவரது நண்பர்களும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து உள்ளனர். ஆனால் அந்த நபர் சிகிச்சை பலன் அளிக்காமல் ஆஸ்பத்திரியில் இறந்தார். இதுபற்றி அறிந்த உனகுந்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த நபரின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடல் பாகல்கோட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
விவசாயி சாவு
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் கூடலசங்கமா அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் கூடலப்பா போலி (வயது 58) என்பதும், அவர் விவசாயி என்றும் தெரிந்தது. இதற்கிடையே விபத்து பற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடலப்பாவின் உறவினர்கள், சிதானந்தா சவதியை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தியதாக தெரிகிறது.
இதுபற்றி அறிந்ததும் உனகுந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிதானந்த் சவதியை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து உனகுந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நேற்று மதியம் பிரேத பரிசோதனை முடிந்ததும் கூடலப்பாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உடலை எடுத்து சென்று குடும்பத்தினர் தகனம் செய்தனர். துணை முதல்-மந்திரியின் மகன் குடிபோதையில் காரை ஓட்டியதால் தான் விவசாயி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த சம்பவம் பாகல்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story