நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் "ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வோம்" திருச்சி வீரர், வீராங்கனைகள் நம்பிக்கை
நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் "ஒலிம்பிக் போட்டியில் வென்று நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வோம்" என்று திருச்சியை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருச்சி,
நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் "ஒலிம்பிக் போட்டியில் வென்று நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வோம்" என்று திருச்சியை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் 3 பேர் தேர்வு
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வருகிற 23-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தகுதித் தேர்வின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
தடகளப் பிரிவின் தொடர் ஓட்ட வீரர்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், தனலட்சுமி, சுபா வெங்கடேசன் ஆகிய 3 பேர் தேர்வாகி உள்ளனர்.
ஆரோக்கிய ராஜீவ்
இந்தோனேசியா, ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் கலப்பு மற்றும் ஆடவர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் 2 வெள்ளி பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ள ஆரோக்கிய ராஜீவ் தற்போது 2-வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். அவர் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இருப்பது பெருமையாகவும், கவுரவமாகவும் உள்ளது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் பயிற்சி மேற்கொள்ள மைதானங்கள் மூடப்பட்டு இருந்ததால் மிகவும் சிரமப்பட்டேன். இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல் கிடைத்த நேரங்களில் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். இந்த போட்டியில் தங்கம் வெல்வதே என் லட்சியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாயார் பெருமிதம்
லால்குடி அருகே உள்ள வழுதியூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜன் - லில்லிசந்திரா தம்பதியினர் மூத்த மகன் ஆரோக்கிய ராஜீவ் (வயது 30). இவருக்கு அனுஷியா என்ற மனைவியும், அதினா என்ற பெண் குழந்தையும் உள்ளது. அர்ஜுனா விருது பெற்ற ஆரோக்கிய ராஜீவ் தற்போது ஊட்டியில் உள்ள வெலிங்டனில் ராணுவ எம்.ஆர்.சி.-ல் ஹவில்தாராக பணியாற்றி வருகிறார். ஆரோக்கிய ராஜீவின் தம்பி தற்போது ராணுவத்தில் வேலை கிடைத்து பயிற்சியில் உள்ளார். தங்கை எலிசபெத் ராணி லால்குடி பாரதிதாசன் உறுப்புக்கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்து முடித்துள்ளார்.
இதுபற்றி லால்குடியில் உள்ள அவரது தாயார் கூறுகையில், என் மகன் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கும், லால்குடி இளைஞர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக கூறினார்.
வீராங்கனை தனலட்சுமி
திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர்- உஷா தம்பதியரின் மகள் தனலட்சுமி. கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற 24-வது தேசிய பெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் பங்கேற்ற இவர் 100 மீட்டர் ஓட்ட தூரத்தை 11.39 விநாடிகளில் கடந்து, இந்தியாவின் முன்னணி வீராங்கனையான டூட்டி சந்தை முந்தினார். இதேபோல 200 மீட்டர் ஓட்டத்தில் போட்டி தூரத்தை 23.26 விநாடிகளில் கடந்து பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்து இந்தியாவே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.
தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள தனலட்சுமி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள தேசியப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். தான் தேர்வானது குறித்து தனலட்சுமி கூறியதாவது:-
நிச்சயம் பதக்கம் வெல்வேன்
சிறுவயதிலிருந்தே விளையாட்டு மீது ஆர்வம் இருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாகத்தான் தடகளத்தில் தீவிரப் பயிற்சி எடுத்து வருகிறேன். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நான், பயிற்சிக்கு ஆகும் செலவுகளைக் கூடச் செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனாலும், என்னை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கக்கூடிய ஒரு தடகள வீராங்கனையாக மாற்ற வேண்டும் என்பதில் எனது தாயார் உறுதியாக இருந்தார்.
தற்போது எனது தாயாரின் கனவை நிறைவேற்றி உள்ளேன். எனக்கும் மனநிறைவாக உள்ளது. நான், நாட்டுக்குப் பெருமைத் தேடித் தரும் வகையில் நிச்சயம் இப்போட்டியில் தங்கப்பதக்கத்தை வெல்வேன் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுபா வெங்கடேசன்
ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வுபெற்ற தடகள வீராங்கனை சுபா வெங்கடேசன் கூறியதாவது:-
நான் சிறுவயது முதலே விளையாடி வருகிறேன். சென்னையில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்தேன். எனக்கு பயிற்சியாளர் இந்திரா பயிற்சி அளித்தார். அவரது பயிற்சியினால் நான் அதிகமான தேசிய விருதுகளை பெற்றேன். எனக்கு கிடைத்த விருதுகளை பார்த்து இந்தியன் கேம்பில் அழைத்தனர். இங்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிறது. இங்கு ஹெலினா என்பவர் பயிற்சி அளித்து வருகிறார்.
கடந்த வாரம் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி தேர்வு வைக்கப்பட்டது. அதில் நான் தேர்வானது மிகவும் சந்தோஷமாக உள்ளது. 20 தேசிய விருதுகள் பெற்றுள்ளேன். 8 இண்டர் நேஷனல் போட்டியில் பங்கேற்று 3 விருதுகளை வென்றேன். நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் எனது சிறப்பான ஆட்டத்தை கொடுத்து தங்கப்பதக்கம் வெல்வேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குடும்பத்தினர் மகிழ்ச்சி
திருவெறும்பூர் பகவதிபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் - பூங்கொடி தம்பதியரின் மகள் சுபா. தந்தை வெங்கடேசன் கட்டிட தொழிலாளி. தாய் வழி தாத்தா-பாட்டியிடம் வளர்ந்த சுபா, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் என்ற செய்தி கிடைத்தவுடன், குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். சுபாவின் தாத்தா சங்கிலி முத்து, காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். இவர் ஒரு கால்பந்தாட்ட வீரர். விபத்து ஒன்றில் இவரது கால்கள் துண்டானது. தனது பேத்தியை ஒரு விளையாட்டு வீரராக, விளையாட்டு துறையில் ஒரு சாதனைப்பெண்ணாக வேண்டுமென விரும்பினார். வயது மூப்பின் காரணமாக சங்கிலி முத்து காலமானார். அவரது மரணம் குறித்த செய்தியை சுபாவிற்கு தெரியப்படுத்தாமல், அவரது குடும்பத்தினர் சுமார் 6 மாத காலம் மறைத்துள்ளனர். இதனை தெரியப்படுத்தினால் ஓட்டப்பந்தய பயிற்சி எடுப்பதில் தடங்கல் ஏற்படும் என தயங்கியுள்ளனர். மறைந்த தாத்தா சங்கிலிமுத்துவின் கனவுகளை பேத்தி நினைவாக்க இருக்கிறார் என அவரது பாட்டி சின்னப்பொண்ணு பெருமிதத்துடன் கூறினார்.
Related Tags :
Next Story