புஞ்சைபுளியம்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல்


புஞ்சைபுளியம்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 July 2021 3:51 AM IST (Updated: 7 July 2021 3:51 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
சாலை மறியல்
புஞ்சைபுளியம்பட்டி சந்தைரோட்டில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டு இருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடையின் முன்பு செல்லும் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
கடை இடமாற்றம்
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். 
அப்போது அந்த பெண்கள் கூறுகையில், “டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு வருபவர்கள் சாலையிலேயே உட்கார்ந்து அருந்துகின்றனர். இதனால் பெண்கள் நடந்து செல்ல முடிவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும், அங்கு 24 மணிநேரமும் மது விற்பனை நடக்கிறது. எனவே டாஸ்மாக் கடையை மூடும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம்”, என்றனர்.
இதையடுத்து டாஸ்மாக் உதவி மேலாளார் ஜெகதீசன் அங்குள்ள பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ஒரு மாதத்துக்குள் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற உரிய நடவடிக்ைக எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இதன்காரணமாக மதியம் 12 மணிஅளவில் கடை திறக்கப்பட்டது.

Next Story