சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை-கலெக்டர் கார்மேகம் தகவல்
சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
சேலம்:
சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
சேலத்தாம்பட்டி ஏரி
சேலம் ஊராட்சி ஒன்றியம், சிவதாபுரம் அருகில் உள்ள சேலத்தாம்பட்டி ஏரியில் கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அதன் பின்னர் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
மழைக்காலங்களில் சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து மழைநீர் வெளியேறி வாய்க்கால் வழியாக சாலைகளில் வழிந்தோடும் நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதையொட்டி ஏரியில் ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் மழைக்காலங்களில் அருகில் உள்ள தாமரை ஏரி, தளவாய்ப்பட்டி ஏரி, வளையப்பட்டி ஏரி ஆகியவற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரும் இந்த ஏரிக்கு வந்து சேருகிறது.
தீவிர நடவடிக்கை
மேலும் மழைக்காலங்களில் இந்த ஏரி அடிக்கடி நிரம்பி வழிகிறது. இதில் இருந்து வெளியேறும் தண்ணீர் சிவதாபுரம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகிறது. எனவே சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக சேலம் மாநகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது சேலம் மாநகராட்சி என்ஜினீயர் அசோகன், தாசில்தார் தமிழரசி, சேலம் மாநகர் நல அலுவலர் பார்த்திபன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன், நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன், உதவி என்ஜினீயர் மோகன்ராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story