எடப்பாடி அருகே கோவில் கதவுகளை தீ வைத்து எரித்து விட்டு திருடிய மர்ம நபர்கள்- 3-வது முறையாக நடந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி
எடப்பாடி அருகே கோவில் கதவுகளுக்கு தீ வைத்து எரித்து விட்டு, மர்ம நபர்கள் உண்டிலை உடைத்து திருடி சென்று உள்ளனர். 3-வது முறையாக நடந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எடப்பாடி:
எடப்பாடி அருகே கோவில் கதவுகளுக்கு தீ வைத்து எரித்து விட்டு, மர்ம நபர்கள் உண்டிலை உடைத்து திருடி சென்று உள்ளனர். 3-வது முறையாக நடந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாட்டு பெருமாள் கோவில்
எடப்பாடி அருகே உள்ள பக்கநாட்டு கிராமம் கரட்டுகாடு பகுதியில் மாட்டு பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கோவில் பூசாரி சுப்பிரமணி (வயது 63) பூஜையை முடித்தபின் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதனிடையே நேற்று காலை 6 மணி அளவில் பொதுமக்கள் சிலர் கோவில் வழியாக நடைபயிற்சிக்கு சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 24) என்பவர் கோவில் கதவுகள் தீவைத்து எரிக்கப்பட்டும், உடைக்கப்பட்டும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோவில் முன்பு திரண்டனர். தொடர்ந்து பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது கோவிலில் கதவுகளை தீ வைத்து உடைத்து, உள்ளே சென்ற மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் இதே கோவிலில் 3-வது முறையாக திருட்டு நடைபெற்றதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story